தி.ஜானகிராமனின் நூற்றாண்டு —என் பகிர்வு.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! தி.ஜானகிராமன் எனக்கு பரிச்சயமானது நான் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது .என் தோழிகள் இருவர் தர்க்கம் செய்து கொண்டு இருந்தனர்,’அது எப்படி 11 வருஷம் மூத்த பெண்ணை ஒரு பையன் லவ் பண்ண முடியும்,நினைத்தே பார்க்க முடியவில்லை’என்ற வார்த்தைகள் கேட்டன.நான் ஆர்வமானேன்.”மோக முள்” என்ற நாவலை பற்றிய கலந்துரையாடல் அது.அந்த நாவலை இரவல் வாங்கிப்படித்தேன்.ஏற்கனவே ராஜேஷ்குமார்,பட்டுகோட்டை பிரபாகர்,இந்துமதி,சிவசங்கரி,லெஷ்மி நாவல்களும்,கொஞ்சம் சுஜாதாவும் வாசித்த பழக்கம் உண்டு.பள்ளிநாட்களில் ஆங்கிலத்தில் கதைகள் வாசித்தால்தான் ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுதவும்,பேசவும் வரும் என்று சார்லஸ் டிக்கன்ஸ்,ஆர்.கே.நாராயணன் வாசித்தேன்.தமிழ் இலக்கியத்தில் பொன்னியின் செல்வன் தவிர்த்து கிளாசிக் தமிழ்க் கதைகள் அறிமுகம் இல்லை,”மோகமுள்” தான் முதல்.யாரிடமும் நாவலின் பெயரைச்சொன்னால் நம்மை தப்பாக நினைப்பார்களோ என்ற பயம் வேறு.மெதுவாகப்படித்தேன்.தி.ஜா.வின் வார்த்தைகளின் ஜாலம் மெதுவாகப் படித்தால்தான் உணரமுடியும்.தண்ணீரில் கல் எறிந்தால் மெல்ல வட்டவட்டமாக வருமே அதுமாதிரி.தி.ஜா.வின் வார்த...