தோழா—தோழி

முகநகநட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
நட்புக்கு இலக்கணமாய்,துரியோதனன்-கர்ணன்,குசேலர்-கிருஷ்ணர்,
இராமன்-சுக்ரிவன் என்று இந்திய இதிகாசங்களில் ஆரம்பித்து ரோமாபுரி வரலாற்றில் ஒரு ஜூலியஸ் சீசர்-மார்க் ஆண்டனி வரை ஒரே ஆணாதிக்கம் தான். நண்பேன்டா!என் நண்பனுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்,அவன் காதலை சேர்த்து வைக்க என்ன வேணும்னாலும் செய்வேன்—இந்த வசனங்கள் நாம எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம்.நேற்று,பென்குயின்,என்றுஒரு படம்,அமேசான் ப்ரைம் ல பார்த்தேன்.நினைத்துக்கூட பார்க்கமுடியாத கொடுமையான சைக்கோபாத் சம்பவங்கள்,அதை அரங்கேற்றுவது ஒரு தோழி.பெண்கள் என்றாலே பொறாமை குணம் உடையவர்கள் என்ற ஒரு பிம்பத்தை,இதிகாசங்கள்,நாடகங்கள்,திரைப்படங்கள்,கதைகள்
இப்பொழுதுள்ள டிக்டாக்,மீம்ஸ் வரை பறைசாற்றுகின்றன.
            ஆண்கள் எப்போதும் நட்பு வட்டத்திலேயே இருப்பார்கள்.சேர்ந்து டூர்,டின்னர்,டிரிங்ஸ்,கிளப் என்று தொடர்பில் இருப்பார்கள்.ஆனால்,பெண்களுக்கோ,திருமணத்திற்குப்பின்னால்,
குழந்தைகள் வளர்த்து,மாமியார்,மாமனார் சேவித்து,குடும்ப சச்சரவுகளை தாண்டி,வேலைக்கு செல்பவர்கள் அந்த பளுவையும் தாங்கி,நட்புக்களை
பேணிக்காப்பது சற்று கடினம் தான்.வாட்ஸ்அப் வந்த பிறகு நட்பு பேணுவது இலகுவாகி இருக்கிறது.இது இந்த தலைமுறையின் வரம்..
பள்ளித்தோழிகள்,கல்லூரித்தோழிகள் மீட் என்று களைகட்டுகிறது
பெண்கள் நட்பு.எல்லோராலும் முடியாவிட்டாலும்,பெரும்பான்மையான
பெண்கள் இதில் உற்சாகமாகவே பங்கெடுக்கிறார்கள்.
              பள்ளிபருவத்தில் கடிதங்களில் ஆரம்பித்து,இ-மெயில் வரைந்து,செல்போன் பேசி,எஸ்.எம்.எஸ் அனுப்பி,ஆர்குட்,முகநூல் தாண்டி,இப்போ வாட்ஸ்அப் வீடியோகால் வர பயணித்த நட்புகள் 
எனக்கு உண்டு.இலக்கியம்,சினிமா,அரசியல் பேசி வளர்ந்த பல நட்புகளை
சமூகவலை தளங்களில் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.கல்லூரியில்
என்னைப்பற்றி சரியாக எடைபோட்டு கவிதை எழுதிய தோழியை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறேன்,அவள் கிடைக்கவில்லை.ஊர்விட்டு ஊர்வந்த எனக்கு இன்று வேற்றுமொழி பேசும் நட்புக்கள் கூட துணை நிற்கின்றன.
            கற்பு என்பதை பொதுவில் வைப்போம் என்றான் பாரதி.நட்பைக்கூட கற்பைப் போல எண்ணுவேன் என்றார் வாலி.இந்த இரண்டையும் சேர்த்தால்,நட்பு வளர்ப்பதில்,ஆணுக்கு பெண் நிகர்,கற்பை பேணுவதில் பெண்ணிற்க்கு ஆண் குறைவில்லை—எப்படி இருக்கிறது இந்த லாஜிக்.😜

Comments

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

பேரைச் சொல்லவா!