தி.ஜானகிராமனின் நூற்றாண்டு —என் பகிர்வு.
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
- தி.ஜானகிராமன் எனக்கு பரிச்சயமானது நான் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது .என் தோழிகள் இருவர் தர்க்கம் செய்து கொண்டு இருந்தனர்,’அது எப்படி 11 வருஷம் மூத்த பெண்ணை ஒரு பையன் லவ் பண்ண முடியும்,நினைத்தே பார்க்க முடியவில்லை’என்ற வார்த்தைகள் கேட்டன.நான் ஆர்வமானேன்.”மோக முள்” என்ற நாவலை பற்றிய கலந்துரையாடல் அது.அந்த நாவலை இரவல் வாங்கிப்படித்தேன்.ஏற்கனவே ராஜேஷ்குமார்,பட்டுகோட்டை பிரபாகர்,இந்துமதி,சிவசங்கரி,லெஷ்மி நாவல்களும்,கொஞ்சம் சுஜாதாவும் வாசித்த பழக்கம் உண்டு.பள்ளிநாட்களில் ஆங்கிலத்தில் கதைகள் வாசித்தால்தான் ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுதவும்,பேசவும் வரும் என்று சார்லஸ் டிக்கன்ஸ்,ஆர்.கே.நாராயணன் வாசித்தேன்.தமிழ் இலக்கியத்தில் பொன்னியின் செல்வன் தவிர்த்து கிளாசிக் தமிழ்க் கதைகள் அறிமுகம் இல்லை,”மோகமுள்” தான் முதல்.யாரிடமும் நாவலின் பெயரைச்சொன்னால் நம்மை தப்பாக நினைப்பார்களோ என்ற பயம் வேறு.மெதுவாகப்படித்தேன்.தி.ஜா.வின் வார்த்தைகளின் ஜாலம் மெதுவாகப் படித்தால்தான் உணரமுடியும்.தண்ணீரில் கல் எறிந்தால் மெல்ல வட்டவட்டமாக வருமே அதுமாதிரி.தி.ஜா.வின் வார்த்தைகள்மெல்ல மெல்ல நம்மை ஊடுருவும்.அதே சமயத்தில் சில வார்த்தைகள் முகத்தில் அறைந்தார்போல் இருக்கும்.கும்பகோணத்தில் கோயில்,குளம்,யமுனாவின் வீடு,பாபுவின் அறை,பக்கத்து வீடு எல்லாம் எப்படி இருக்கும்,பாபு,யமுனா,ரங்கண்ணா,பாபுவின் தந்தை,தங்கம்மா எப்படி இருப்பார்கள்?! என்ற கற்பனை தலைவிரித்து ஆடியது.கதை முடிவில் ஒரு நிறைவு.அப்போ இந்த காதல் சரிதான் என்று நம்மை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டாரா தி.ஜா.?!அவரின் மற்ற கதைகள் அப்போது ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை.இரண்டு வருடம் கழித்து மீண்டும் தி.ஜா. இந்த முறை ஓரு ஜூனியர் ஆனால் நல்ல வாசிக்கும் பழக்கம் உடையவள்,எனக்கு ,”மரப்பசு” கொடுத்தாள்.அப்புறம்,”நளபாகம்””அம்மா வந்தாள்” “உயிர்த்தேன்” “செம்பருத்தி” என என் தி.ஜா. வாசிப்பு தொடர்ந்தது.மீண்டும் ஒரு இடைவெளி விட்டு,2018 சென்னை புத்தக்க்கண்காட்சியில் தி.ஜானகிராமன் சிறுகதைகள்,நாவல்கள் என நிறைய வாங்கினேன்.திரும்பவும் வாசித்தேன்.இம்முறை வேறுமாதிரியான அனுபவம்.கல்லூரிப்பருவத்தில் ஒரு சர்ச்சைக்குரிய காதல்கதை சொல்பவராகத் தெரிந்த தி.ஜா,இப்பொழுது பெண்ணியத்தை அறுபதுகளிலேயே துணிச்சலாக சொன்னவராகத் தென்பட்டார்.அவருடைய கதாநாயகிகள் அழகு மட்டுமின்றி,அறிவால்,கம்பீரத்தால்,அன்பால் ஆளுபவர்கள்.பெரியார் பெண்ணியம் பேசிய காலகட்டத்தில் தி.ஜானகிராமன்,யமுனா,அம்மணி,அமிர்தம்,அலங்காரத்தம்மாள்,செங்கம்மா.. என்று ஆளுமையுடைய பெண் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார்.மரபு முக்கியமா !? இயல்பு வெல்லுமா?! என்ற தர்க்கம் தி.ஜா வின் எல்லா கதைகளிலும் உண்டு.எது சரி,எது தவறு என்று அவர் எங்கேயும் சொல்லவில்லை.அங்கொன்றும்,இங்கொன்றுமாக,சில வார்த்தைகள்,’எல்லோரும் சந்தோசமாய் வாழத்தானே பிறந்திருக்கோம்’ ‘இதற்குத்தானா’ ‘வரப்புலாம் நல்ல போட்டிருக்கான்’... அன்பு ஓன்றே உலகின் பிரதானம்,அதற்கு ஈடு இணையில்லை என்பதை தெளிவாக சொல்லியிருப்பார். வேகமான,விறுவிறுப்பான கதைகள் இல்லை,சைக்கோ வில்லன்கள் இல்லை.இயல்பான கதை,இயல்பான விஷம வில்லன்,சுயநலவாதியான சுற்றத்தார்,கைகொடுக்கும் நண்பர்கள்,குற்றவுணர்வு உறுத்தி இறுதியில் பிராயச்சித்தம் தேடும் கதாபாத்திரங்கள்,யாருமே முழு நல்லவரும் இல்லை,கெட்டவரும் இல்லை.அதுதானே யதார்த்தம்.ஓஷோ வின் வார்த்தைகளில் ,”ஆறு அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது,அதில் அர்த்தம் என்ன இருக்கிறது?,ஆனால் அழகு இருக்கிறது,அந்த அழகை பாருங்கள்” வாழ்க்கை அழகானது,இயற்கையாக வரும் அன்பு எல்லாமே அழகானது என்கிறார் தி.ஜானகிராமன்.அவருடைய நூற்றாண்டை கொண்டாட தமிழக அரசோ,பல்கலைகழகங்களோ முனையவில்லையென்றாலும்,என்னைப்போன்ற தி.ஜானகிராமனின் வாசகர்கள் அவர் எழுத்துக்களை என்றும் கொண்டாடுவோம்.
படிச்சு ரசிச்சு ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறீங்க .நல்ல நடை.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபிரமாதம்
ReplyDeleteமிக அழகான நடை
70 வயதில் தான் மோகமுள் உன்னிடம் இருநது வாங்கி படித்தேன்
இந்த புத்தகம் பற்றி தெரியும் ஆனால் நீ சொன்னது போல் படிக்க தயக்கம்
ஆனால் என்னால் ஏற்க முடியவில்லை
Probably become too old
I understand maami!thank you for the feedback!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSemma Story Mogamul. My all time favourite. Good write up Velselvi.
ReplyDeleteThank you😊
Delete