தளர்வு

                                   சற்றே குறுகலான அந்த தெருவில் பெல் அடித்துக்கொண்டே சிரமப்பட்டு பால்காரர் நுழைந்தார்.சிரமத்திற்கு காரணம் ஒரு சின்ன யானை வண்டி.அந்த வண்டியில் பீரோ,மடக்கு கட்டில்,சேர்கள்,பாத்திரங்கள்,ஸ்டவ் என சாமான்கள் ஏற்றப்பட்டு இருந்தன.ஆட்கள் இன்னமும் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.”யார் வீடு காலிபண்றாங்க ? என்று பால்காரர் பக்கத்து டீக்கடைகாரரிடம் கேட்டார். “இங்க கட்டிட வேலைக்கு ஆள் சேர்த்து விடுவாரே மேஸ்திரி! அவர் வீட்ல காலி பண்றாங்க! “எங்கே அவரை காணோம்?” என்று பால்காரர் கேட்க “அவரெல்லாம் ஜூன் மாசமே ஊருக்கு போயிட்டார்,இப்போ அவர் உறவுக்கார பையனை வைத்து காலி பண்றார்.”அய்யோ! எனக்கு காசு பாக்கி இருக்கே, என்ன செய்ய என்று பதறினார் பால் காரர்.”அதோ அந்த பையன்தான் உறவுக்கார பையன்,அவன் கிட்ட கேளுங்க” என்று ஐடியா கொடுத்தார் டீக்கடைக் காரர்.

                       “ எப்பா தம்பி! நான் தணிகாசலம் சார் வீட்டுக்கு பசுமாட்டு பால் கொடுக்கிறவன்,என்னடா கொஞ்ச நாளா காணலையே ன்னு நினைச்சேன்,காலி பண்றாங்களா? ,எனக்கு ஒரு 3500 ரூபாய் பாக்கி இருக்குப்பா ,கேட்டு சொல்றியா?” என்று கேட்ட பால்காரரிடம் ,செய்வதறியாது முழித்தான் உறவுக்கார பையன்.”போன் போட்டு,கேட்கிறயா?” என்று அவர் அழுத்தம் தர , போன் செய்தான் . “மாமா! இங்க எல்லா சாமான்களும் ஏத்தியாச்சு,ஆமா! சிலிண்டரை சரண்டர் பண்ணிட்டேன்,கைல இருந்த பணத்தை வீட்டு ஓனர்கிட்ட கொடுத்திட்டேன்,மீதியை அடுத்த மாசம் கொடுப்போம் னு சொல்லிட்டேன்.பாப்பாவோட ரோஜாப்பூ தொட்டியா?,இருக்கு,ஆனா தண்ணி ஊத்தாம பட்டுப்போச்சு!தொட்டிய மட்டும் ஏத்திடவா?சரி மாமா!

                       “ மாமா! அப்புறம்,உங்க பால்காரருக்கு ஏதோ பாக்கியாமே,கேக்கிறார் இப்போ!எங்கிட்ட வேற பணம் இல்ல மாமா,போனை குடுக்கவா,?” இந்தாங்க பேசுங்க! என்று பால்காரரிடம்  போனை கொடுத்தான். “சார்! நல்லா இருக்கிங்களா? என்ன சார்,சொல்லாம கொள்ளாம திடுதிப்புன்னு ஊரை விட்டு போறிங்க ! 3500 ரூபாய் பாக்கி இருக்கே சார்! அடுத்த மாசமா! நானே கஷ்டத்தில இருக்கேன் சார்! பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும் சார்,தயவு செய்து யார்கிட்டயாவது சொல்லி வாங்கி கொடுங்க சார்! என்று கெஞ்சினார்.அப்படியா சார்!சரி சார்! இங்கேயே வெயிட் பண்றேன் சார்!” இந்தாப்பா ! என்னை கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்றார்” என்று போனை திருப்பிக் கொடுத்தார்.

                           மணி 11 ஆகிவிட்டது.இன்னமும் நாலு வீடுகளுக்கு பால் தரவில்லை.உறவுக்காரபையன் பணம் வாங்கிவருகிறேன் என்று சென்று நான்கு மணி நேரம் ஆகிவிட்டது. மீதிபால் எல்லாம் கெட்டு போயிருக்கும்.கேனை திறந்து பார்த்தார்,கெட்ட வாசனை வந்ததது. கீழே கொட்டினார்! என்ன பாலை கீழ கொட்டிட்டிங்க ?என்று  அந்த வீட்டு ஓனர் கேட்டார்.”அஞ்சு லிட்டர் பால் வீணா போச்சு!ஆனா இப்போ விட்டுட்டா இந்த 3500 ரூபாய் வராதுல்ல! பதில் சொன்னார் பால்காரர்.

                                 “அது சரி!எனக்கு 70 வயசு ஆச்சு!மூணு வீட்டு வாடகைதான் என் வருமானம்,இப்ப இரண்டு வீடு காலி பண்ணிட்டாங்க,வாடகை பாக்கி வேற நிறையா இருக்கு,எப்போதான் இதெல்லாம் சரியாகுமோ தெரியலை “ என்று சலிப்புடன் சொன்னார் வீட்டுஓனர்.  டீ குடித்துக் கொண்டிருந்த சின்ன யானை வண்டி டிரைவர்,” எங்களுக்கு வேற எந்த லோடு எடுக்கற வேலையே இல்லை,வீடு காலி பண்ணி ஏத்துறதுதான்,அதை வச்சி இரண்டு நேரம் சாப்பிட்டுகிட்டு இருக்கோம்,எல்லாம் சரியாக அடுத்த வருஷம் ஆகும் னு சொல்றாங்க” என்றார் கவலையுடன்.

                                          ஒரு வழியாக 12 மணிக்கு அந்த உறவுக்கார பையன் திரும்பிவந்தான்.”இந்தாங்க உங்க பணம்,சரியா இருக்கா பாருங்க?”என்றான். சரியாக இருந்தது.”சரிப்பா! ரொம்ப நன்றி! எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்குது,அதான் கேட்டேன்.” என்று அவனை சமாதானம் செய்வது போல் பேசி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் பால் காரர் .

                                          “  என்ன அண்ணே!கிளம்பலாமா?! “ என்று டிரைவரிடம் கேட்டான்.”உச்சி வெயில் ஆயிருச்சு,காலையிலேயே போலாம் னு சொன்னேன்” என்று முணங்கிக் கொண்டே வண்டியை எடுத்தான் டிரைவர்.உறவுக்கார பையன் சோர்ந்து போயிருந்தான்.”மாமா ஊரிலே என்ன பண்ண போறார் னு தெரியலை,இப்போதைக்கு புது கட்டிடம் கான்ட்ராக்ட் வராது போலிருக்கு,நமக்கு காலேஜ் திறந்தா தான் சென்னை “ என்று நினைத்துக் கொண்டான்.

                                         ஒரு வழியாக சென்னையை விட்டு வெளியேறியது சின்ன யானை.டோல் கேட்டை த் தொட்டது. பூத்தில் இருக்கும் பையன்,”ஒரு நாளைக்கு எத்தனை சின்ன யானை தான்யா வருவிங்க வீட்டு சாமான்களை ஏத்திக்கிட்டு” என்று கூறிக்கொண்டே டிக்கெட்டை கொடுத்தான்.சின்ன யானை பின்னால் ஒரு டொயோட்டா கார் வந்தது.காருக்குள்,”அப்பாடா,ஊருக்குப் போய் அப்பா அம்மா  எல்லோரையும் பார்க்க போறோம் னு ஹாப்பியா இருக்கு” என்ற சவிதா வை பார்த்து சிரித்துக்கொண்டே வஸந்த் ,”ஆமா!எவ்வளவு மாசம் ஆச்சு இப்படி டிரைவ் வந்து” என்றான் உற்சாகமாய்.”போகிற வழியில நல்ல ரெஸ்டரண்ட் ல சாப்பிடணும், அந்த மஞ்சள் கலர் பூக்களை பாருங்க,என்ன ஒரு ப்ரஷ் கலர்,செடிகள்,மரங்கள் பச்சபசேல் னு இருக்கே!இப்படிலாம் முன்னாடி இருக்காதுல்ல “ என்று குதுகலமாக பேசினாள் சவிதா.அதற்கு வஸந்த் ,”வண்டியில இருந்து வர புகையில்லை,தொழிற்சாலை வேஸ்ட் இல்லை,ஆள் நடமாட்டம் இல்லை, அதனால,இயற்கை தன்னை சரி பண்ணிகிடுச்சி, ஸூப்பர் ல, இப்படியே இருந்தா எப்படி இருக்கும்”!

Comments

  1. The pandemic's impact on each and every person...most particularly on one's economic status is a huge blow. Hope we all have the strength to withstand this crucial phase.
    U hv expressed it beautifully Vels... keep rocking 💐

    ReplyDelete
  2. Super and expressed the delicate feelings everyone is having from their position.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரஸ் ஆழிப்பேரலை

தோழா—தோழி

பேரைச் சொல்லவா!